புனே: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட நேர முடியவில் 5 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி 198 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 301 ரன்கள் நியூஸிலாந்து முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற நிலையில் நியூஸிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று (அக்.24) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்தது ஆல்அவுட்டானது நியூஸிலாந்து.
இதையடுத்து விளையாடிய இந்திய அணி 156 ரன்களுக்குள் சுருண்டது. அணியில் ரவீந்திர ஜடேஜா மட்டும் அதிகபட்சமாக 38 ரன்களைச் சேர்த்தார். இதனால் இந்திய அணி, நியூஸிலாந்தை விட 103 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை நியூஸிலாந்தின் டெவோன் கான்வே, டாம் லேதம் இணை தொடக்கி வைத்தனர்.
9-வது ஓவரில் 17 ரன்கள் சேர்த்திருந்த டெவோன் கான்வேவை எல்பிடபள்யூ முறையில் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் வாஷிங்டன் சுந்தர். 23 ரன்களில் வில் யங்கை விக்கெட்டாக்கினார் அஸ்வின். 9 ரன்களில் ரச்சின் ரவீந்திரா போல்டானார். டேரில் மிட்செல் 18 ரன்களில் அவுட்டாக, சிறப்பாக விளையாடி 86 ரன்களைச் சேர்த்த டாம் லேதம் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கினார்.
இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 53 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி 198 ரன்களைச் சேர்த்தது. இதன் மூலம் 301 ரன்கள் இந்தியாவை விட முன்னிலை பெற்றது நியூஸிலாந்து. டாம் ப்ளண்டெல் 30 ரன்களுடனும், க்ளன் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.